Sunday, January 19, 2014

தமிழர் அரசுகள்- குமரிக்கண்டம்


                                          
உலகின் பழமை வாய்ந்த இனங்களில் ஒன்றாகத் தமிழர் திகழ்ந்து வருவதை பலரும் அறிவர். உலகின் மிகப் பழமையானதாகக் கருதப்படும் சில மொழிகளில் ஒன்றாகத் தமிழும் திகழ்ந்து வருகின்றது.

இனமும் மொழியும் தோன்றிய காலம் எதுவென அறுதியிட்டுக் கூறமுடியாதளவுக்கு தோற்றகாலம் வரலாற்றுக் காலங்களுக்கப்பால் நீண்டு செல்வதாக அறிஞர் கருதுகின்றனர்.

மொழியின் பழமை குறித்து அறிஞர் கி. பெ ஆ விசுவநாதம் பின்வருமாறு கூறுகின்றார்.

“எமது பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் கிறித்துவுக்கு முன் 300 ஆண்டளவில் எழுதப்பட்டது என்கிறார்கள். இந்நூலில் தொல்காப்பியர் 257 இடங்களில் என்மனார் புலவர், என்ப என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது இக்கருத்தை ஏற்னவே கூறியுள்ளார்கள் என்பது இதன் பொருளாகும். ஆகவே தொல்காப்பியத்துக்கு முன்பாகவும் இலக்கணங்கள் இருந்திருக்கின்றன என்பது தெளிவாகின்றது. இலக்கியங்கள் தோன்றிய பின்பே இலக்கணம் தோன்றும் என்பது பொது விதி. எனவே இலக்கணம் தோன்றுவதற்கு முன்பாக இலக்கியங்கள் தோன்றியுள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இலக்கியங்கள் தோன்றுவதாக இருந்தால் திருத்தமான எழுத்து வழக்கு இருந்திருக்க வேண்டும். திருத்தமான எழுத்து வழக்கானது பல நூற்றாண்டுகளாக பேசப்பட்டு வரும் மொழியிலிருந்துதான் தோன்றும். மொழி தோன்றி திருத்தமான பேச்சு வழக்கினைப் பெறுவதற்கு பல்லாண்டு காலம் செல்லும். இவ்வாறு மொழியின் தோற்றுவாய் தேடிப் பின்னோக்கிச் சென்றால் காலம் நீள்கின்றதேயன்றி விடையறிய முடியவில்லை. இதுவே எமது மொழியின் பழமைக்குச் சான்று” என்கின்றார் முத்தமிழறிஞர் கி. பெ ஆ விசுவநாதம் அவர்கள்.

இந்துணைப் பழமை வாய்ந்த தமிழர் எந்த நிலத்திலே வாழ்ந்தனர்? எவ்வாறான அரசாட்சிகளை எங்கெல்லாம் கொண்டிருந்தனர்? என்ற ஆய்வுகளுக்கு முழுமையான விடைகள் கிடைத்துவிட்டதாகக் கருதமுடியாது எனினும் ஆய்வு முன்னோட்டமாகவும், ஆய்வுச் சிந்தனைகளை தூண்டவல்லதாகவும் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பல கருத்துகள் முடிந்த முடிபாகவன்றி ஆய்வை நோக்கிக் செல்லும் வலுவான ஆதாரங்களாத் திகழ்கின்றன.

இவ்வாறான கருத்துகளைத் தொகுத்து, வரலாற்றுக்காலம் முதல் இன்றுவரை தமிழர் அரசுகள் எங்கெல்லாம் எவ்வாறு திகழ்திருக்கின்றன? அவற்றின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறிருந்தன? என்ற செய்திகளைப் பகிர்ந்து கொள்வதாக இக்கட்டுரைத் தொடர் அமைகின்றது.

குமரிக்கண்டம்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த பெரும் கடற்கோளில் குமரிக்கண்டம் என்ற பெருநிலத்தின் பெரும் பகுதி  அமிழ்தழிந்து போனதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இந்த நிலப்பரப்பெங்கும் தமிழர் வாழ்ந்;தனர் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

கலித்தொகை எனும் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறும் செய்யுள் வரிகள் கடல்கோள் பற்றிக் குறிப்பிடுகின்றன.

மலிதிரையூர்ந்துதன் மணிகடல் வெளவலில்
மெலிவின்றி மேற்சென்று மேவார் நபடிடம்படப்
புலியோடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடச்சீர்த் தென்னவன்     -  கலித்தொகை 104

பாண்டி நாட்டைக் கடல்கொள்ள தென்னவனாகிய பாண்டிய மன்னன் பெரும் அலைகடல் நீந்தி கரைசேர்ந்து சேரன் சோழன் ஆகிய இருவரது நிலத்தின் சில பகதிகளை வென்று அரசமைத்தான் என்கிறது இப்பாடல்.

பஃறுளி ஆற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள.....   – நாடுகாண் காதை 19-20 - சிலப்பதிகாரம்

என்னும் சிலப்பதிகார அடிகளால் பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கம் முதல் கடல்கோளிலும், குமரிக்கோடு இரண்டாம் கடல்கோளிலும் அழிவுற்றன எனக் கொள்ள வேண்டும் என்கின்றனர் அறிஞர்.

பாண்டியரின் மிகப்பழமையான அரசாகத் திகழ்ந்த தென்மதுரையில் பஃறுளியாறு இருந்ததை,

முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலிலும் பலவே.         புறம் 9

நன்னீரை எடுத்து வருகின்ற பஃறுளியாற்றினது மணலின் எண்ணிக்கையை விடப் பாண்டியன் கீர்த்தி பெரியது என்கிறது இந்தப்பாடல்.

கடல்கோளிற்கு முன்பாகப் பாண்டியர் தென்மதுரையில் அரசமைத்திருந்தனர் என்பது வரலாற்றுக் குறிப்பு. தென்மதுரை பற்றிய பிற குறிப்புகள் ஆய்வுக்குட்பட்தாக இதுவரை தெரியவில்லை. இதே காலகட்டத்தில் தென்மதுரைக்கு வடக்கிலும் சோழ சேர அரசுகள் இருந்திருக்கலாம். அவற்றுக்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சங்ககாலத்தில் (கிமு 300 – கி;பி 300) பெறப்பட்ட இவ்வரசுகள் பற்றிய குறிப்புகள் இவை நீண்டகால அரசுகளாகத் திகழ்திருக்க வேண்டும் என்பதையே உணர்த்துகின்றன.

முதற்கடற்கோளில் பஃறுளியாற்றுடன் தென்மதுரை அழிவுற்றதையடுத்து கபாடபுரம் எனும் நகர் அரசாகத் திகழ்ந்தமைக்குச் சான்றுகள் உள்ளன.

பாண்டியனின் தலைநகராகத் திகழ்ந்த கபாடபரம் மணிமுத்துகளுடன் அணிசெய்யப்பட்டுச் சிறப்புடன் விளங்கியதாக வால்மீகி இராமாயாணம் குறிப்பிடுகின்றது.

பப்ருவாகனன் என்னும் மன்னன் கபாடபுரம் நோக்கிப் படையெடுத்ததாக வியாயர் எழுதிய மகாபாரதம் குறிப்பிடப்படுகின்றது. முதல் படையெடுப்பை கண்ணன் அடக்கியதாகவும், பின் மீண்டும் பப்ருவாகனன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தபோது பாண்டியனைச் சுற்றி நல்லறிஞர் சூழ்ந்திருந்தனர் எனவும் மகாபாரதம் கூறுகின்றது.

தமிழ் வளர்த்த முதற்சங்கம் தென்மதுரையிலும் இடைச்சங்கம் கபாடபுரத்திலும் இருந்ததாகப் புலவர் கோவிந்தன் கூறுகின்றார்.

சிலப்பதிகாரம் குறிப்பிடுவதைப் போன்று குமரிக்கோடு என்ற நிலப்பகுதி கடற்கோளில் கொள்ளப்பட்டபோது கபாடபுரம் எனும் பாண்டிய நகரமும் அழிவுற்றிருக்கலாம் எனக் கொள்ளலாம்.

1900 ஆண்டில் வெளியான ‘மனித அறிவியல்’ என்ற திங்களோடு மக்கள் இனம் தோன்றிய இடம் இந்துமாகடலுக்குள் மூழ்கிக்கிடக்கின்றது எனக் குறிப்பிட்டிருப்பதாக டாக்டர் ஆ. இராமகிருட்டிணன் குறிப்பிடுகின்றார்.

குமரிக்கண்டம் பற்றி ஆய்வை நடத்திய வெளிநாட்டறிஞர்களான வோல்டர் ராலே, ஹெக்கல், சேர் கோல்டன்ஸ் ஸ்காட், எலியட் போன்றோர் குமரி இனமக்கள் தென்னிந்தியா, இலங்கை, கிழக்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து போன்ற நாடுகளில் வாழ்ந்து வருதாககக் குறிப்பிட்டுள்ளனர்.

குமரிக்கண்டம் எனும் பழம்பெரும் நிலம் இருந்தமையும், அந்த நிலத்தில் வாழ்ந்த மக்கள் தமிழரே எனவும், அவர்களது அரசுகளாகத் தென்மதுரை, கபாடபுரம் என்பன திகழ்ந்திருக்கின்றன என்பதையும் வரலாற்று ஆதாரங்கள் வாயிலாக நாம் தெரிந்துகொள்ள முடியும். எனினும் இக்கருத்துகளை மறுப்போரும் உளர்.

குமரிக்கண்டம் தொடர்பான ஒரு விரிவான ஆய்வு தேவையென அறிஞர் பலரும் கருதுகின்றனர்.

சிந்துவெளி அரசும் தமிழரும்.

உலகின் மிகப்பழமையான நாகரிகங்களைக் கண்டறியும் ஆய்வுகளில் சிந்துவெளி முக்கியமான இடம் பெறுகின்றது. கி;மு 5000 ஆண்டுகளுக்கு முன் வேதகால மக்கள் என அழைக்கப்படுகின்ற ஆரியர் கைபர் கணவாய் வழியாகப் பயணித்துச் சிந்துவெளி நகரங்களைக் கண்டனர். அங்கு கண்ட நகரவாழ்வும் நாகரிக வளர்ச்சியும் சிந்துநதி நீரால் விளைந்த பசுமையும் அவர்களுக்குப் புதிதாக இருந்தன. சாரைசாரையாக வந்த ஆரியர் இந்த நகரங்களைக் கைப்பற்றும் நோக்கோடு சிந்துவெளி மக்களோடு போராடத் தொடங்கினர் என்கிறது ஆரியர்கள் எழுதி வைத்த ரிக்வேதம்.

ஆரியர் வருகைக்கு முன்பாக உயர்ந்த நாகரிக பண்பாட்டுச் சிந்தனை கொண்டவர்களாக வாழ்ந்த சிந்துவெளி மக்கள் யார்? என்பதுதான் பெறுமதி மிக்க வினாவாக எழுந்து நிற்கின்றது.

அங்கு வாழ்ந்தோர் ஆரியரே என்கின்ற கருத்தும்
அவர்கள் தற்போது தென்னிந்தியாவில் வாழும் திராவிடரே என்ற ஆய்வுகளும்,
இந்த இருவினத்தாரும் இல்லாமல் பிறிதோரினம் வாழ்ந்திருக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகின்றது.

வியத்தகு அறிவாற்றலுடன் வாழ்ந்த சிந்துவெளி மக்கள் தென்னிந்தியராக இருந்தால் சிந்துவெளியரசும் தமிழர்களுக்குரியதே.

சிந்துவெளி யாருடையது என்பதை அடுத்த கட்டுரையில் தொடர்வோம்.

                                                                                         பொன்னையா விவேகானந்தன்

தாய்வீடு - கனடா டிசம்பர் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை. 


No comments:

Post a Comment