Sunday, September 4, 2016

சங்கத் தமிழர் வானியல் அறிவு

சங்கத் தமிழரின் வானியல் வல்லாண்மை

ஒரு நாட்டின் அரசியற் தலைவர் பலர் கூடிப் பேசிக்கொண்டிருக்கின்றனர். அவ்வேளை அவர்களது விருப்பத்திற்குரிய ஒரு சோதிடர் அங்கு வருகின்றார். மூத்த அரசியற் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க, அக்காலத்தின் பலனைச் சோதிடர் கூறுகின்றார்.

இந்தப் பங்குனி மாதத்தின் முதல் பதினைந்து நாட்களுக்குள், மேட இராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்தில் ஓர் இரவில்,
பதின்மூன்று நட்சத்திரங்கள் ஒளி விட்டுப் சுடர்வனவாகும். அப்போது உத்திர நட்சத்திரம் உச்சியில் இருந்து சாயும். அதற்கு எதிராக மூல நட்சத்திரம் எழும். அவ்வேளை மிருகசீரிடம் மேற்கே சாய்ந்து மறையும்.
இந்தப் பொழுதில் விளக்குப்போல் தோன்றும் ஒரு நட்சத்திரம் கிழக்குக்கும் போகாமல் வடக்குக்கும் போகாமல் வடகிழக்காகப் பூமியில் விழுந்து சிதறும்.
இது நிகழ்ந்து ஏழாம்நாள் ஒரு அரசியற் தலைவர் இறப்பார்.

சோதிடர் கூறிய செய்தி அரசியற் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சோதிடர் குறிப்பிட்டதைப் போலவே நட்சத்திரம் ஒன்று எரிந்து விழுந்த ஏழாவது நாளில் மூத்த அரசியல் தலைவர் இறந்தார்.

இது நிகழ்ந்தது தற்கால அரசியல் தலைவர் எவரினதும் வாழ்வில் அல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன் சேர மன்னனின் ஒருவனது வாழ்விற்தான்.

சோதிடர் புலவர் கூடலூர்க் கிழார்.
மாண்ட சேர மன்னன் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.

கோள்களின் இயக்கத்திற்கும் உயிர்களின் வாழ்வுக்கும் இடையான நெருக்கமான தொடர்பைக் கண்டறிந்து காலத்தைக் கணித்த சங்கத்தமிழரது ஆற்றலுக்கு இச் செய்தி ஒரு சான்று.

பெருவளர்ச்சி கண்டு வரும் அறிவியலில் வானியற்றுறை தற்போது பெருஞ் செல்வாக்கு செலுத்தி வருகின்றது. எல்லைகள் இன்றி  அகன்று பரந்திருக்கும் அண்டவெளி பற்றிய ஆய்வுகள் பல்கிப் பெருகியுள்ளன. பூமியின் இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் வானியல் பற்றித் தமிழர் பன்னெடுங் காலத்திற்கு முன்னரே தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தனர் என்ற செய்தி பலருக்கும் வியப்பாக இருக்கும்.

தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் குறிப்பிடுகின்ற வானியற் செய்திகள் பிறர் நூல் வாயிலாக அறிந்தவை அன்று. பன்னெடுங்கால வானியல் ஆய்வுகளின் வழியே தமிழர் கண்டறிந்த உண்மைகளே என்பதைப் பலரும் நிறுவியுள்ளனர்.

ஆரியர் வருகை தமிழகத்தில் தாக்கங்களை ஏற்படுத்துவதற்கு முன்னரே வானியல் பற்றித் தமிழர் நன்கு தெரிந்து கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. தமிழரது அறுபது ஆண்டுகள் என்ற ஆண்டுக் கணிப்பும், கதிரவன், திங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழர் வகுத்த பருவ காலங்களும் ஆரியரோடு தொடர்பில்லாதவை. 12 ஆண்டுகளை ஒரு மாமாங்கம் எனக் கணிக்கும் தமிழர் வழக்கம் ஆரியரிடம் இல்லை.

தமிழர் கண்டறிந்து வழக்கிற் கொண்ட வானியல் செய்திகளை உலகப் பேரறிஞர் பலர் ஆய்வு செய்து பாராட்டியுள்ளனர். சிலேட்டர் என்னும் “அறிஞர் தமிழரின் வானவியல் கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணித முறைகளிலும் நிதானமானது” எனக் கூறியுள்ளதாக முனைவர் அ. தட்சணாமூர்த்தி தமிழர் நாகரிகமும் பண்பாடும் (பக்: 166) என்ற நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.

தமிழர், வானியலை நன்கறிற்தோரைக் ‘கணியர்’ என குறிப்பிட்டிருக்கின்றனர். வானில் வலம் வரும் கோளின் அசைவுகளைக் கொண்டு காலத்தைக் கணித்து நன்மை தீமைகளைக் கூறுபவராகக் கணியர் திகழ்ந்துள்ளனர்.

கணியன் பூங்குன்றனார், கனிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் என்ற சங்கப் புலவோரின் பெயர்கள் இக் கூற்றுக்குச் சான்றாகின்றன. அரசர் அவையில் பெருங்கணிகன் என்ற வானியல் அறிஞன் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகின்றது.

விசும்பு
ஆங்கிலத்தில் ளியஉந என அழைக்கப்படுகின்ற விண்வெளியைத் தமிழர் விசும்பு எனக் குறிப்பிட்டனர். விண்ணுக்கும் (ளமல) விசும்பிற்கும் (ளியஉந) உள்ள வேறுபாட்டைத் தெளிவாக அறிந்திருந்தனர். விசும்பிற்கும் அப்பால் பரந்து விரிந்த வெளியை அண்டவெளிகள் (புயடயஒநைள) என்றனர். இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ தொலைநோக்கி வாயிலாக அண்டங்களைக் கண்டறிவதற்கு முன்பாகவே தமிழர் கொண்டிருந்த வானியல் அறிவு வியப்பை ஏற்படுத்துகின்றது.

பழம் பெரும் இலக்கணமான தொல்காப்பியம்,
“நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்”   (தொல்:  பொரு: 90)
என அக்கால ஐம்பூத இயல்பைக் குறிப்பிடுகின்றது.

முதலில் விசும்புதான் இருந்தது. அங்கே சூரியக் குடும்பங்கள் தோன்றின. அவை சுழலும் போது தீ உண்டாயிற்று. அதிலிருந்து ஒளி பிறந்தது. சூரியக் குடும்பங்கள் உதிர்ந்த தீப்பிழம்புகள் கோள்கள் ஆயின. அவை சுழலும்போது காற்று ஏற்பட்டது. காற்றோடு கலந்த கோள்களில் தண்ணீர் கிடைத்தது. அக்கோள்கள் குளிர்ந்த பின் மண் உண்டாயிற்று.  (திரு. இராசகோபாலன் - இலக்கியத்தில் வானியல் பக்:17-18) புறநானூறு என்ற சங்ககால இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள இச் செய்தி இன்றைய அறிவியலாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வானியல் உண்மையாகும்.

“மண் திரிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை” (புறம் 2)

மண்ணிருந்து பார்க்கும் போது விண் நீலமாகவே தெரியும். ஆயினும் விசும்பு இருள் மயமானது என்பதைக் கண்டறிந்து சொல்கிறது மலைபடுகடாம் என்ற இலக்கியம்.

“திருமழைத் தலைஇய இருள்நிற விசும்பின்..” (மலைபடு: 1-2)

யுகம் என்பதனை தமிழர் அக்காலத்தே ஊழி என அழைத்தனர். ஊழிகளைத் தொடர்ந்தே வானம், காற்று, தீ, நீர், நிலம் என்பன தோன்றின என்பதை பரிபாடல் என்ற இலக்கியம் தெளிவாகக் கூறுகின்றது.

“விசும்பில் ஊழூழ் செல்லக்
கருவளர் வானத்திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு” - பரிபாடல்-2

முறையே வானம் முதல் ஊழிக் காலத்திலும், காற்று இரண்டாம் ஊழியிலும், தீ மூன்றாம் ஊழியிலும், நீர் நான்காம் ஊழியிலும், நிலம் ஐந்தாம் ஊழியிலும் தோன்றின.

பூமியின் தோற்றம் பற்றிய தமிழரது இத் தெளிவான செய்தியை இன்றைய அறிவியல் உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

கதிரவன்

கதிரவனை நன்கு ஆராய்ந்த அறிவியலாளர் கதிரவன் ஒரு திடப்பொருள் அல்ல என்றே கூறுகின்றனர். கதிரவனில் காணப்படும் பல தாதுப்பொருட்கள் (ஏயிழச) ஆவி உருவில் இருக்கின்றன என்றும் அவை எரிவதாலேயே நமக்கும் வெப்பமும் ஒளியும் கிடைப்பதாகக் கூறுகின்றனர். பெரும்பாணாற்றுப்படை கதிரவனைப் “பகல் செய் மண்டிலம்” எனக் கூறகின்றது.

கதிரவனுடைய தன்மைகளையும் பயன்களையும் நன்கு உணர்ந்த தமிழர் பழங்காலந் தொட்டே கதிரவனை வழிபட்டு வந்துள்ளனர். சிலப்பதிபாரம் என்ற ஒப்பற்ற இலக்கியத்தை ஆக்கிய இளங்கோவடிகள் தன் கடவுள் வாழ்த்தில் ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ எனக் கதிரவனுக்கே முன்னுரிமை வழங்குகின்றார்.

வெண்மை என்பது தனி நிறம் அல்ல, அது ஏழு நிறங்கள் முறைப்படி சேர்ந்த கலவை என அறிவியலாளர் கூறுகின்றனர். கதிரவனில் ஏஐடீபுலுழுசு என்கின்ற ஏழு வண்ணங்கள் உண்டு என்பதை அறிவியல் ஏற்றுக்கொண்டுள்ளது.

சங்கப் புலவரான கபிலர் குறிஞ்சிப் பாட்டு என்ற இலக்கியத்தில் கதிரவன் ஏழு வண்ணக் குதிரைகள் பூட்டிய தேரில் கதிரவன் உலா வருகின்றான் என்கிறார்.

“எல்லை செல்ல ஏழுர்பு இறைஞ்சிப்
பல்கதிர் மண்டிலம் கல்சேர்வு மறைய” (குறிஞ்சிப் பாட்டு)

இரவுப் பொழுதில் துருவ மீனைக் கொண்டு திசையறிந்த தமிழர் பகலில் நான்கு திசைகளையும் கதிரவன் துணை கொண்டு அறிந்தனர். சித்திரைத் திங்கள் பத்தாம் நாளுக்குப் பின் கதிரவன் தமிழகப் பரப்புக்கு மேல் தலை உச்சியில் இருப்பதைக் கண்டறிந்தனர். அன்றைய நாளில் இரண்டு கோல்களை நட்டு, அக் கோல்களின் நிழல் தரையில் விழும் நிலையைக் குறித்துத் திசைகளைக் கணக்கிட்டனர் என்பதை நெடுநல்வாடை என்ற இலக்கியம்,

“விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரைநாள் அமையத்து
நூலறி புலவர் நுண்ணிதன் கயிறிட்டு”   (நெடுநல்வாடை)

எனக் கூறுகின்றது.

கதிரவனை மையமாகக் கொண்டே பிற கோள்கள் சுற்றி வருகின்றன என்ற வானவியற் கூற்றைக் கி.பி 1543 இல் கண்டறிந்து வெளியிட்டவர் கொப்பர்னிக்கஸ் என்ற வானவியல் அறிஞராவர். 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் கதிரவனை முதலாகக் கொண்டே பிற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதைக் கண்டறிந்தனர் என்பதை நீலகண்ட சாஸ்திரி என்பார்,

“என்றூழ் உறவரு மிருசுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை யுள்படுவோரும்” (பரி. 19:46-47)

என்ற பரிபாடல் வரிகளை ஆதாரம் காட்டிக் கூறியுள்ளார். (தமிழர் மரபுச் செல்வங்கள் பக்: 119)

“சுடர் சக்கரத்தைப் பொருந்திய ஞாயிறு முதலான கோள்களது நிலைமையை வரைந்த ஓவியங்களால் அறிவோரும்” எனப் பொருள் தருகின்றன இவ்வரிகள்.

16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் வெளிப்படுத்தப்பட்ட சூரிய மையக் கொள்கை சங்கத்தமிழரால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது.

“வாள்நிற விசும்பிற் கோள்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு”      (சிறுபாண் - 242 243)

‘ஒளி மிக்க வானில் கோள்மீன்களால் சூழப்பட்ட இளம் கதிர்களைக் கொண்ட கதிரவன்’ என்பது இவ் வரிகளின் பொருளாகும்.

கதிரவனின் மையப் பகுதியில் வெப்பம் கனன்று கொண்டிருப்பதை நற்றிணை ‘அகங்கனலி’ எனக் கூறுகின்றது. கதிரவனில் இருந்து வெளியேறும் தீ நாக்குகளை ‘நெடுஞ்சுடர்க் கதிர்’ எனக் குறிப்பிடுகின்றது.


கோள்கள்
விசும்பு அண்டம் எங்கும் பரவிக் கிடக்கும் கோள்களைப் பற்றிப் பழந்தமிழர் நன்கு தெரிந்துகொண்டிருந்தனர். கோள் என்பது கோளம் என்ற உருண்டை வடிலான பொருளைக் குறிக்கும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். பூமி உட்படக் கோள்கள் யாவும் உருண்டையானது எனத் தமிழர் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர். கோள் என்பதற்கு வளைதல் என்ற பொருளும் உண்டு. விசும்பு வெளியில் இவை வளைந்து சுழன்று வருவதால் கோள் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்பர்.

விசும்பில் ஒளிரும் பொருட்களை மீன் என்றே அழைத்தனர். தாமே ஒளிவிடக் கூடியவற்றை நாண்மீன் எனக் குறிப்பிட்டனர். கதிரவனின் ஒளி கொண்டு ஒளிர்வனவற்றைக் கோள்மீன் எனக் குறிப்பிட்டனர். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பன ஞாயிறின் ஒளி கொண்டு ஒளிரும் கோள்களாகும்.

அகன்ற மன்றத்தில் ஆட்டுக்கிடாய்களும் சிவலைப் பறவைகளும் விளையாடும் காட்சி நீலவானில் நாண்மீன்களும் கோள்மீன்களும் கலந்திருப்பதைப் போல் இருந்தது எனப் பட்டடினப்பாலை கூறுகின்றது.

நீநிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோணமீன் போல
மலர்தலை மன்றத்து......   (பட்டி. 67-77)

கதிரவக் குடும்பத்தில் ஒன்பது கோள்மீன்கள், அவற்றின் துணைக் கோள்கள், குறுங்கோள்கள், வால்மீன்கள், விண்கற்கள் என்பன உள்ளதாக விண்ணியல் அறிஞர் கூறுவர். இக்கோள்களைப் பரிபாடற் பாடலொன்று பட்டியலிடுகின்றது.

“தீவளி விசும்பு நிலம் நீர் ஐந்தும்
ஞாயிறும் திங்களும் மறனும் ஐவரும்” (பரி. 3: 4-5)

இப்பாடல் தீ, காற்று, விண், நிலம், நீர் என்ற ஐம்பூதங்களோடும்  ஞாயிறு திங்கள் என்ற முதன்மைக் கோள்களோடும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஐந்து கோள்களையும் குறிப்பிடுகின்றது.

கோள்களைப் பற்றிய தெளிவான செய்திகள் சிலவற்றைப் பரிபாடல் தருகின்றது.

“விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி

புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த

பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ,
நெரிதரூஉம் வையைப் புனல்.   (பரிபாடல் 11: 1-15)

இப் பாடலின் பொருளை முழுமையாக விளங்கிக் கொள்வது சிறப்பானது.

வானில் உள்ள இருபத்தேழு நட்சத்திரக்கூட்டங்கள் உள்ளன. இந்த 27 நட்சத்திரக்கூட்டங்களும் 12 இராசி(ஓரை)களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஒவ்வோர் இராசியிலும் இரண்டே கால் நட்சத்திரக்கூட்டங்கள் 12 ஒ 2 1ஃ4ஸ்ரீ27)  உள்ளன.  இந்த 12 ராசிகளும் நான்கு ராசிகள் அடங்கிய மூவகை வீதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:

    1. இடப வீதியில் - கன்னி, துலாம், மீனம், மேடம் என 4 இராசிகள்.
    2. மிதுன வீதியில் - தேள், வில்லு, மகரம், கும்பம் என 4 இராசிகள்.
    3. மேட வீதியில் - இடபம், மிதுனம், கற்கடகம், சிங்கம் என 4 இராசிகள்.

‘வெள்ளியாகிய சுக்கிரன் இடபத்திலும்
செவ்வாய் மேடத்திலும்
புதன் மிதுனத்திலும்
ஆதித்தன் சிம்மத்திலும்
வியாழனாகிய குரு மீனத்திலும்
திங்களும் சனியும் இராகுவும் மகரத்திலும்
கேது கடகத்திலும் செல்லக்கூடிய
ஆவணித்திங்கள் அவிட்டநாளில்,
திங்களை இராகு தீண்டுகின்ற சந்திர கிரகணம் நேருமாயின்,
மழைபெய்யுமென்ற வானியல் விதிப்படி, கோள்கள் கூடியமையால்
மேற்குத்தொடர்ச்சி மலையில் மழைபெய்து வைகை ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடியது’ என்பது இப்பாடலின் பொருள்.

இக்காலத்தில் செயற்கைக் கோள்களின் துணையுடன் கூறப்படும் வானிலை அறிக்கைகளே பொய்த்து விடுகையில், அக்காலத்தில் கோள்களில் நிலையைக் கணக்கில் கொண்டு மழை வரும் நாளைத் துல்லியமாகத் தமிழர் கணித்துள்ளனர் என்பது பெரு வியப்பைத் தருகின்றது.

இச்செய்யுள் குறிப்பிட்ட கோள்நிலைகளைக் கொண்டு இது எந்தநாளுக்கு உரியது என்பதனை அறிஞர் கணித்துள்ளனர். அது கி;.மு. 161 ம் ஆண்டு ஆவணி 12ம் நாள் வியாழக்கிழமை என்பதாகும்.

இராகு, கேது என்பன விசும்பில் உலா வரும் கோள்கள் அல்ல. அவை கற்பனைக் கோள்களே. சாயா கோள்கள் அல்லது நிழற்கோள்கள் என்றே அவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன. கோள்களை அடிப்படையாகக் கொண்ட சோதிடக் கணிப்புக்கு இவ்விரு கோள்களும் அவசியமாக இருந்தன. பூமியும் கதிரவனும் திங்களும் நேர்கோட்டில் சந்திக்கின்ற பொழுதே கிரகணங்கள் ஏற்படுகின்றன. இக்கிரகணங்களும் பூமில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்குக் காரணங்களாக இருந்தன எனப் பழந்தமிழர் நம்பினர்.

இராகு கேது என்ற பூமியைச் சுற்றிக் காணப்படுகின்ற இரு புள்ளிகளில் கதிரவன், பூமி, திங்கள் என்பன நேர்கோட்டில் வருகி;ன்ற பொழுது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இராகுவும் கேதுவும் பாம்புகளாகவே உருவகிக்கப்பட்டுள்ளன. மாதங்கீரனார் என்ற புலவர் நற்றிணையில்,

“அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த
பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல”  எனக் குறிப்பிடுகின்றார்.

“அகன்ற கரிய ஆகாயத்தின்கண்ணே (அரவினாற்) பாம்பினால்  சிறிது விழுங்கிக் குறை படுக்கப்பட்ட பசிய கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல்” என்பது இப்பாடலின் பொருளாகும்.

கிரகணம் என்ற வடமொழிச் சொல்லின் வேர்ச் சொல் கரவணம் என்ற தமிழ்ச்சொல் ஆகும். கரத்தல் என்றால் மறைத்தல் என்று பொருள்.  காக்கை "கரவா" கரைந்துண்ணும் என்கிறது திருக்குறள். அதாவது உணவை மறைக்காது பிற காக்கைகளை அழைத்து உண்ணும். நிலவோ, பூமியோ சூரியனை மறைப்பதால் (கரத்தலால்) கரவணம். அதனால்தான் பகலில் மறைந்து திரியும் பூச்சி "கரப்பான்" எனப்பட்டது.

திங்கள்
மதி, நிலா என தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்பட்ட துணைக் கோள் திங்களாகும். இதனை இப்போது சந்திரன் என்ற வடமொழிச் சொல்லால் அழைத்து வருகின்றோம்.

திங்களானது கதிரவனோடு சேர்வதுவும், பிரிந்து எதிர்ப்பக்கமாகச் சேர்வதுவும் நிகழ்கையில் அதன் ஒளி நாளுக்கு நாள் வளர்ந்து முழு வட்டமாகும். இதனை,

“மாசு விசும்பின் வெண்டிங்கள்
மூவைந்தான் முறை முற்ற”  (புறம் 400) என்பதால் அறியலாம். திங்கள் வளர்கையில் 15 நிலைகளை உடையது. அது போல் தேய்கையிலும் பதினைந்து நிலைகளை உடையது. எட்டாம் நாள் பிறை நிலவு ‘எண்ணாட்டிங்கள்’ (புறம் 118) எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. முழுநிலாவை உவவுமதி என அழைத்துள்ளனர். முழுமதி நாளில் கதிரவனும் திங்களும் எதிரெதிராக இருக்கும். இதனை,

“உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி யொருசுடர்
புண்கண் மாலை மறைந்தாங்கு”  (புறம் 65) என்ற புறநானூற்றுப் பாடல் விளக்குகின்றது.

செவ்வாய்
பூமியில் இருந்து நோக்கும் போது செந்நிறம் உடையதாகத் தோன்றும் கோள் செவ்வாய் ஆகும். அக்காலத்திலேயே இதைக் கண்டறிந்து பொருத்தமுறச் செவ்வாய் எனப் பெயரிட்டுள்ளனர்.

கடலின் மேல் தோன்றுகின்ற சிறிய திடலின் மேல் ஏற்றப்பட்ட சிறு விளக்குப் போல் செவ்வாய் தோன்றுகின்றது என்பதை

முந்நீர் நாப்பன் திமிற்சுடர் போல
செம்மீன் இமைக்கும் மாவிசும்பின்” (புறம். 60: 1-2)

புலவரான மருத்துவன் தாமோதரனார் கூறுகின்றார்.

வெள்ளி
பழந்தமிழர் வானவியலில் பெரிதும் பேசப்பட்ட மற்றுமொரு கோள் வெள்ளி ஆகும். இக்கோள் வெண்மை நிறமுடையது, ஆகையால் வெள்ளி எனப் பெயர் பெற்றது என்பர். இது காலையிலோ மாலையிலோ தோன்றும். காலையில் தோன்றுவதை விடிவெள்ளி என்பர். வெள்ளியை மழைக்கோள் என்றும் அழைப்பர்.

வெள்ளி தெற்கு நோக்கி நகர்ந்தால் மழை பொழியும் என நம்பினர்.

“வெள்ளி தென்புலத்துறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயனில் காலை”  (புறம். 339)

சனி
கோள்களில் தொலைவில் இருப்பதுவும் கரிய நிறமுடையதுவும் சனி ஆகும். இதன் நிறம் கருதி இதனைக் மைம்மீன் என்றனர். காரி என்பதே இதன் தூய தமிழ்ப் பெயராகும். பின்னாளில் வடமொழிப் பெயரான சனி செல்வாக்குப் பெற்றுவிட்டது.

சனியானது புகைக்கின்ற போதும் ( அதாவது ஓரைகளான இடபம், சிங்கம், மீனம் என்பவற்றில் சனி நுழைகின்ற போதும்) தூமம் என்ற வால் வெள்ளி தோன்றுகின்ற போதும் தென்திசை நோக்கி வெள்ளி ஓடினாலும் பெரும் தீங்கு விளையும் என பழந்தமிழர் நம்பினர்.

“மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்...” (புறம் 117) எனத் தொடர்கின்ற இந்தப் புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் கபிலர் ஆவர்.

சனி சில (இடபம், சிம்மம், மீனம்) ஓரை(இராசி)களில் நுழையும் போதும்;;, வால் வெள்ளி தோன்றினாலும், வெள்ளி தெற்கு நோக்கிச் சென்றாலும் உலகில் வறட்சியும் வறுமையும் மிகுந்து தீய செயல்கள் நிகழும் என்பது சோதிடர்களின் நம்பிக்கை.

பெருந்தீங்கு விளைவிக்கவல்ல நிலைகளில் கோள்கள் இருந்தாலும் பாரியின் பறம்பு செழிப்புக் குன்றாத நாடு. ஆயினும் பாரியை இழந்ததால் பறம்பு வளம் குன்றியது என இப்பாடலில் கபிலர் குறிப்பிடுகின்றார்.

இதையே சிலப்பதிகாரம்,
“கரியவன் புகையினும் தூமம் தோன்றினும்
 விரிகதிர் வெள்ளி தென்புலம் பாடரினும்” சிலம்பு (10-102-10) எனக் கூறுகின்றது.

கோள்களும் பயன்களும்
பழந்தமிழர் கதிரவனே புவியைச் சுற்றி வருகின்றது என நம்பினராயினும் ஏனைய கோள்களில் நிலையைப் பெரிதும் தெளிவாகவே கணித்துள்ளனர். பூமியில் உயிர்களுக்கு ஏற்படுகின்ற அனைத்து நன்மை தீமைகளுக்கும் கோள்களின் நிலைகளே காரணம் என நம்பினர். உயிர்கள் பிறக்கும் போது திங்களுக்கு அருகில் நிற்கும் கோளே அவ்வுயிரின் நாள்மீன் எனப்பட்டது.

ஒன்பது கோள்மீன்களோடு 27 நாண்மீன் கூட்டங்களையும் கண்டறிந்து 12 ஓரைகளையும் வகுத்துச் சோதிடக் கணிப்புச் செய்தனர்.

விரிச்சி கேட்டல், நன்னாள் பார்த்தல், போருக்காக குடை விடும் நாள் பார்த்தல், வாள் விடும் நாள் பார்த்தல் என்பன அக்காலத்தில் பெரிதும் வழக்கத்தில் இருந்திருக்கின்றன.

சேர மன்னன் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை இறந்து விடுகிறான். அவனது இறப்பின் பின் புலம்பும் கூடலூர்க் கிழார் பல தீய அறிகுறிகள் தோன்றி அவனது இறப்பை எனக்கு உணர்த்தின என்கின்றார்.

ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முடப்பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காய
பங்குனி உயர் அழுவத்துத்
தலை நாள்மீன் திரிய…………..
கனை எரி பரப்பக், கால் எதிர்பு பொங்கி
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே………….. (புறம் 229)

(இப்பாடலின் பொருள் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ளது)

அதாவது தூமகேது என்ற எரிநட்சத்திரம் ஒன்று தோன்றிய ஏழாம் நாளில் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை இறந்து விடுவான் என்று கூடலூர்க் கிழார் அஞ்சினார். அதன்படியே அவன் இறந்துபட்டவுடன் புலவர் பாடிய பாடல் இது. சிலர் இதை எரிகல் விழுந்தது என்பர். தினமும் பூமியில் பல்லாயிரக் கணக்கான எரிகற்கள் விழ்வதால் பல அறிஞர்கள் இதை தூம கேது என்றே விளக்கியுள்ளனர்.

நட்சத்திரங்கள் எனப்பட்ட நாண்மீன்களின் இயக்கத்தைக் கொண்டு, இராசிகள் எனப்பட்ட ஓரைகளின் தன்மைகளுக்கும் ஏற்ப மிகத் துல்லியமாக வாழ்வியல் நிகழ்வுகள் கணிக்கப்பட்டமைக்கு இப்பாடல் ஓரு சான்றாகும்.

உறையூரைச் சேர்ந்த முதுகண்ணன் சாத்தனார் என்னும் புலவர் சோழ நாட்டினது அறிவு வளத்தைப் பாராட்டுகின்றார்.

“கதிரவன் செல்லுகின்ற பாதையை நன்கு அறிந்தும் கதிரவனின் இயக்கத்தை நன்கு புரிந்தும், அந்த இயக்கத்தால் ஏற்படுகின்ற பார் வட்டத்தைத் தெரிந்தும் காற்று இயங்கும் திசையையும் காற்று வெற்றிடமாவுள்ள விசும்பினையும் நேரிற் சென்று பார்த்து உணர்தோர் போன்று நாள் ஒவ்வொன்றும் இந்தத் தன்மையது என்று கூறுகின்ற அறிஞர் சோழ நாட்டில் உள்ளனர்” என்கிறார் புலவர்.

“செஞ்ஞா யிற்றுச் செலவு அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்தென் போரு முளரே.”

வானவியர் அறிஞர் பலர் அக்காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்கு இப்பாடல் சான்றாகின்றது.

பொழுது
நம் முன்னோர் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களைக் குறிப்பதாகும். அதாவது 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களைக் குறிப்பதாகும். நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம். அவ்வாறெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24ழூ60ஸ்ரீ 1440 ஆகும்.

ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர்.

இவ்வாறான இந்தக் காலப்பகுப்பு வானியல் பற்றிய அறிவின்றி வகுக்க முடியததாகும்.

அறிவியற்துறை பெருவளர்ச்சி கண்டிருக்கும் இக்காலத்தில் வானவியற் பற்றிய ஆராய்வுகளுக்குப் பல்வேறு தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. தொழில் நுட்பக் கருவிகள் எதுவும் இல்லாத அக்காலத்தில் விசும்பில் சுழன்றுகொண்டிருக்கும் கோள்களின் வகையறிந்து, அவற்றின் இயக்கங்களை அறிதியிட்டு, அவை உயிர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை நம் முன்னோர் கணித்திருக்கின்றனர்.  ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வானியல் பற்றிய ஆராய்வுகளுக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழரது வானியற் சிந்தனைகள் வெளிப்பட்டிருந்தன.

தமிழரது வானியற் கருத்துகள் எதுவும் மாணவரது பாடநூல்களில் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. இவை பெரும்பாலும் ஐரோப்பியரது வானியல் ஆய்வுகளை மையப்பபடுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன. வானியற்துறை மட்டுமல்ல, தமிழர்  சிறந்து விளங்கிய துறைகள் பலவும் தமிழ் மாணவரது அறிவியல், வாழ்வியற் கல்வியில் இடம்பெறாதிருப்பது வேதனைக்குரியதே. இலக்கியக் கல்வியிலும், அரிதாகச் சிலர் ஆய்வுகளில் ஈடுபடும் பொழுதுகளிலும் மட்டுமே இத்துறைகள் பேசப்படுகின்றன.

எம்மினஞ் சார்ந்த பெருமைக்கும் போற்றுதலுக்குமுரிய பண்டைத் தமிழரது பேராற்றல்கள் எளிய வகையில் எம் இளஞ் சிறாருக்கு அறிமுகஞ் செய்யப்படல் வேண்டும்.  வளரும் தலைமுறையின் இனஞ் சார்ந்த விழிப்புணர்வே எதிர்கால இன இருப்புக்கு வழி வகுக்கும்.


                           துணை நின்ற நூல்களும் இணையத்தளங்களும்: 

தமிழரின் மரபுச் செல்வங்கள் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள் - வானதி பதிப்பகம் 
தமிழர் நாகரிகமும் பண்பாடும் - டாக்டர் இ. தட்சணாமூர்த்தி 
தமிழியல் பரிமாணங்கள் - கலைஞன் பதிப்பகம்
http://ta.wikipedia.org/wiki/சங்க_கால_வானியல்